உடல் நல குறிப்புகள் தமிழில்

மனிதர்கள் தாங்கள் வேலை பார்க்கும் இடம், சூழல் மற்றும் உணவு, உறைவிடம் போன்றவற்றால் தான் பெரும்பாலும் நோய்க்கு ஆளாகின்றனர். குறிப்பாக உடல் நலம் பேணுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதால்தான் பற்றாக்குறை அல்லது மிகுதி காரணமாக உடல் நோய்வாய்ப்படுகிறது. உடலை சமநிலைப்படுத்தினால் எந்த சீதோஷ்ண நிலையிலும் எந்த நோயும் நம்மை அணுகாது. தற்பொழுது உள்ள இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் ஒரு மனிதன் முழுமையான சமநிலைக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள நேரமிருப்பதில்லை. அதனால் சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் உட்பட கேன்சர், எஸ்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்கள் வரை மனிதனை ஆக்கிரமித்து உயிருக்கே உலை வைக்கிறது. என்ன செய்தால் நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பதை இங்கு தெரிந்துகொள்வோம். சின்ன சின்ன நோய்களுக்கு என்னென்ன மருத்துவங்கள் மற்றும் தடுப்பு முறைகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்வோம்.

health tips and tricks

சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும். மூட்டு வலிக்கு தேங்காய் எண்ணெய் சிறிதளவு மற்றும் எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.
பொன்மேனி தரும் குப்பைமேனி குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். இதற்கு தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் புண்  ஆறிவிடும்.

வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது. ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய்  மறைந்துவிடும்.

வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.


பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம்  நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.

உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும்போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும்போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மூக்கைச் சிந்தவும். சுவாசப்  பாதையைச் சுத்தப்படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத்  தடுக்கலாம்

வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.


அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும். உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால்  தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும். எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம்  குறையும். கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

வெந்தயக்கீரை - வெகு விரைவில் வயிற்றுப் புண் குணமாக

சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை எனப்படுகிறது. இது சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரடப்படுகிறது.
வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப்போக்கவும் பயன்படுகிறது. குடல் புண்களும்  குணமாகின்றன

வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது.

வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது.

மூலநோய், குடல் புண் போன்ற நோய்களுக்கும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. வெந்தயக் கீரையை அரைத்துச் சூடு  செய்து வீக்கங்கள் மீது பூசினால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் தீப்புண்களும் குணமாகும்.


இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது. சிறுநீர்  உறுப்புகளை சுத்தம் செய்கிறது. மூளை நரம்புகளைப் பலப்படுத்துகிறது. வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல்,  வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.

வெள்ளைப் பூசணிக்காய் சாம்பாரில் வெந்தயக் கீரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் பெருத்த உடல் இளைக்கும். வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும்.


உள்ளுறுப்புகளின் அழுக்குள்ளை போக்க கற்றாழை ஜூஸ் 

முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை  பயன்படுத்தலாம்.
தீக்காயங்களுக்கும் உடனடி தீர்வு கற்றாழைச் சாறுதான். இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள  கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும்.

தலைமுடி பராமரிப்பில் கருப்பாகவும், வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது. கற்றாழை சோற்று பகுதியை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு  செழித்து வளரும்.

எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும். கற்றாழை சாறு நமது தோலில் நீரை விட நான்கு  மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது.


தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் கற்றாழை ஜூஸை தினமும் காலையில் குடித்து வரலாம். மேலும் கற்றாழை ஜூஸ் மலக்குடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். உங்களுக்கு செரிமான கோளாறுகள் அடிக்கடி ஏற்படுமாயின், தினமும் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடித்து வாருங்கள். இதனால் செரிமான  பிரச்சனைகள் நீங்குவதோடு, வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதும் விலகும்.

நீரிழிவு நோயாளிகள் கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வருவது நல்லது. ஏனெனில் கற்றாழை ஜூஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகப்  பராமரிக்க உதவும்.

சர்க்கரை நோய் என்றால் என்ன? அது வராமல் தடுப்பது எப்படி? 

நமது உடலின் இரத்ததில் சர்க்கரை அளவு அதிகமாவது தான் நீரிழிவு நோய். இதற்கு காரணம் இன்சுலின் சரியான அளவு உற்பத்தி ஆகாதது அல்லது உற்பத்தியான இன்சுலினை சரியான அளவு பயன்படுத்த முடியாதது.
நமது உடலில் உள்ள கணையம் என்ற உறுப்பில் இருந்து இன்சுலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது நாம் உண்ணும் உணவில் உள்ள  சர்க்கரையைக் கொழுப்பாகவும், கிளைகோ ஜென்னாகவும் சேமித்து வைக்க உதவுகிறது. நாம் சாப்பிடும் உணவின் அளவுக்குத் தக்கவாறு  இன்சுலின் தானாகவே சுரந்து இந்தப் பணியைச் செய்கிறது.

பல காரணங்களால் கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலினின் அளவு குறையும் போது, உணவில் உள்ள சர்க்கரையானது சக்தியாக மாற்றப்படாமல் அப்படியே இரத்ததில் நேரடியாக கலந்து விடுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. அது 180  மில்லிகிராம் சதவீதத்தைத் தாண்டும் போது சிறுநீரிலும் சர்க்கரை வெளியாகிறது. இவற்றைதான் நீரிழிவு நோய் என்கிறோம்.

நீரிழிவு நோய் என்பது இரத்தத்தில் அதிக சர்க்கரையே தவிர சிறுநீரில் அல்ல. இதனால் ஏற்படும் நீண்டகால விளைவுகள் பார்வை இழப்பு, பக்கவாதம், கால் இழப்பு, சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு போன்றவையாகும்.

கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய் உடல் உறுப்புக்களை எந்த அறிகுறிகளும் இல்லாமல் மெதுவாக பாதிக்கும். இரத்தக் குழாய்களில் படியும்  சர்க்கரையானது மாரடைப்பு, கண், கால், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். கண் பார்வை  பறிபோகும் அபாயமும் ஏற்படும்.


மாரடைப்புக்கான முக்கிய காரணிகளுள் நீரிழிவு நோயும் ஒன்று. கால் நரம்புகள் மோசமாக பாதிக்கப்படுவதால் பலருக்கும் கால்களையோ, கால்விரலையோ அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதை உங்களில் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

மாரடைப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்புகளுக்குச் சிகிச்சை செய்ய ஆகும் மருத்துவ செலவுகள் மிக மிக அதிகம். இவற்றையெல்லாம்  கருத்தில் கொண்டு முடிந்தவரை நீரிழிவு நோய் வராமல் தடுப்பதும், அப்படியே வந்துவிட்டாலும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும்  இன்றியமையாதது.
Post a comment

0 Comments