மூடநம்பிக்கை | கம்ப்யூட்டர் ஜாதகம் கணிப்பது எப்படி?
எது உண்மை? தெரிந்துகொள்வோம் வாங்க....
இங்கு ஜோதிடம் பார்க்கப்படும், என்ற பலகையைக் கண்டால் போதும், உடனே கையை நீட்டி விடுவார்கள் தமிழர்கள்!
எதிர்காலத்தைத் தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் அவர்களுக்கு!
வாழ்க்கையில் ஏற்படும் ஆசையும், அச்சமுமே ஜோதிடத்திற்குக் காரணம். ஜோதிடம் அறிவியல் பூர்வமானது என இந்து மதத்தினர் கூறுவார்கள்.
மேலோட்டமாகப் பார்த்தால் ஜோதிடம் அறிவியல் போலவே இருக்கும். ஆனால் அது அறிவியல் இல்லை.
வள்ளுவர் சொன்னார், கயவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை, ஏனெனில் அவர்களும் மனிதர்களைப் போலவே இருக்கிறார்கள் என்றும் அதைப் போலத்தான் இந்த ஜோதிடமும்.ஜோதிடத்தைப் பலரும் நம்புகிறார்கள் என்றால் என்ன பொருள்?
எங்களை நாங்கள் நம்பவில்லை, அறிவியலை நாங்கள் நம்பவில்லை, அறிவை நாங்கள் நம்பவில்லை என்றே பொருள். சரி! ஒருவர் ஜாதகம் பார்க்கிறார், அவருக்கு ஜோதிடர் சொன்னது போல நடக்க வில்லை, உடனே அவர் என்ன கருத வேண்டும்?
ஜோதிடர் சொன்னது நடக்கவில்லை, அதனால் அது உண்மையல்ல என்ற முடிவுக்குத் தானே அவர் வரவேண்டும்?
ஒரு செய்தியைப் பகுத்தறிந்து தெரிந்து கொள்வதில் சில சிரமங்கள் உண்டு. அதையே பட்டறிந்தும் தெரியாமல் இருந்தால் அது அறியாமை இல்லையா?
இதோ அதுபோன்ற அறியாமையின் அண்மைக்காலச் சில நிகழ்வுகளை வாசித்துப் பாருங்கள்.திருச்சி, திருவெறும்பூரில் வசிப்பவர் அரசெழிலன். இவர் தம் வீட்டில் கணினி வைத்திருக்கிறார். இவருக்கு இயல்பிலேயே ஜோதிடத்தின் மோசடிகளை அறிவதில் ஆர்வம்.
அந்த வகையில் ஒரு நண்பரின் மூலம் ஜாதகம் குறித்த ஒரு மென் பொருளை (Software) வாங்கியுள்ளார். அந்த மென் பொருளின் பெயர் லைப் ஷைன் (Life sign)..
இந்த ஜாதக மென்பொருளை புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலுள்ள தமிழ்நாடு கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் தயார் செய்து வருகிறது. இதன் விலை ரூ. 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறதாம்.
இந்த மென்பொருளைக் கணினியில் பொருத்தினால் யார் வேண்டுமானாலும் ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம். ஒருவரின் பெயர், பிறந்த தேதி, பெற்றோரின் பெயர், ஊர் ஆகியவற்றை கணினியில் பதிவு செய்தால், 36 பக்கங்களைக் கொண்ட ஜோதிடப் பலன்கள்(?) உடனடியாக வெளிவருகின்றன. அதை வைத்துதான் பலரின் பிழைப்பும் இங்கு ஓடிக் கொண்டிருக்கிறது.
இதில் சகித்துக் கொள்ள முடியாத கொடுமை என்னவென்றால், நாங்கள் கணினித் துறையில் புலியாக்கும், சிங்கமாக்கும் எனப் பீற்றிக் கொள்பவர்களும் இதற்குப் பலியாகிறார்கள்.
இந்த நிலையில் அரசெழிலன் தம் விவரத்தைக் கணினியில் பதிவு செய்துள்ளார். வழக்கம் போலவே 36 பக்கங்கள் வந்து விழுந்து விட்டன. பிறகு மீண்டும் புதிய விவரம் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில் தன் பெயர், பெற்றோர் பெயர், ஊர் எல்லாம் சரியாகப் பதிந்து, பிறந்த தேதி என்ற இடத்தில் 31.10.2025 எனக் குறிப்பிட்டுள்ளார்.
உடனே 36 பக்கங்கள் வந்துவிட்டனவாம். 2025 ஆம் ஆண்டு வருவதற்கு இன்னும் 17 ஆண்டுகள் உள்ளன. அதற்கும் ஜோதிட பலன்கள் வந்து விட்டது.
அதேபோல திருச்சி தொடர் வண்டி மைதானத்தில் (ஜி கார்னர்) அண்மையில் ஒரு பொருள்காட்சி நடைபெற்றது. அதில் காகபுஜண்டர் கம்ப் யூட்டர் ஜோதிடம் எனும் பெயரில் ஒருவர் கணினியுடன் ஜோதிடம் பார்த்துள்ளார். நம்மவர்கள்தான் ஏமாறுவதில் கில்லாடிகளாச்சே!
ஏராளமான பேர் வரிசையில் நின்றுள்ளனர். அப்போது இராஜா, மூர்த்தி, சுரேஷ் எனும் மூன்று குறும்புக்கார இளைஞர்களும் கூட்டாக வந்துள்ளனர்.அந்த காகபுஜண்டர் கம்ப்யூட்டர் ஜோதிடத்தின் ஏமாற்று வேலை என்ன தெரியுமா?
முதலில் இரண்டு கைகளையும் தண்ணீரில் மூழ்க வேண்டும். அப்படியே ஈரத்துடன் ஸ்கேனர் போன்ற ஒரு கருவியில் வைக்க வேண்டும். உடனே கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு, அதற்குரிய பலன்கள் கணினி மூலம் வெளியாகின்றன.
அந்தக் குறும்புக்கார இளைஞர்களும் அதேபோன்று செய்து விட்டு, பொருள்-காட்சியின் மற்ற பகுதிகளுக்குச் சென்று விட்டனர். மீண்டும் 30 நிமிடம் கழித்து அவ்விடத்திற்கு வந்து, திரும்பவும் ஜாதகம் பார்த்துள்ளனர்.
முதலில் வெளியான பலனும் ( print out) அடுத்து வந்த பலனும் முற்றிலும் வெவ் வேறாக இருந்துள்ளன. ஜாதகம் உண்மையானால் எத்தனை முறை கைரேகையைப் பதித்தாலும், ஒரே மாதிரி அல்லவா வரவேண்டும்?
அந்த இளைஞர்களும் காகபுஜண்டரிடம் தகராறு செய்துவிட்டு, தலையில் அடித்துக் கொண்டே சென்று விட்டனர்.கணினியை மனிதன்தான் கண்டுபிடித்தான். அதுவும் ஆறாவது அறிவான, பகுத்தறிவைக் கொண்டு கண்டுபிடித்தான். மற்றபடி கணினிக்கு என்று தனிஅறிவு கிடையாது.
வெளி நாட்டுக்காரன் கண்டுபிடிக்கும் விஞ்ஞானத்தை அறிவுக்கும் பயன் படுத்தலாம்; அழிவுக்கும் பயன் படுத்தலாம். நம்மவர்களுக்கு இரண்டாவது-தான் சாத்திய மாகிறது. மகா வெட்கம்!
0 Comments
Comment Policy
We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.